Print this page

நந்தசேன-மொட்டு மோதல் உக்கிரம்

September 01, 2019

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தாமரை மொட்டை சின்னமாக கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 8ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் யாவும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கபட்டுள்ளது. இந்நிலையில், நந்தசேனவின் “வழிகாட்டி” எனும் பெயரில் நந்தசேனவின் கொள்கைப்பிரகடனமும் அன்றையதினமே வெளியிடப்படவுள்ளது.

இதனால், மொட்டுவுக்கும் நந்தசேனவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதுடன், கருத்து மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன என உள்வூட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியதர வர்க்க சிங்கள பௌத்தர்களின் கனவை நனவாக்கும் வகையிலேயே 2030 வரையிலான நீண்டகால திட்டங்களை வகுத்தே, நந்தசேனவின் கொள்கை பிரகரடனம் தயாரிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் வகையிலான திட்டங்களை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும், மொட்டுவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவும் முன்னெடுத்துள்ளனர்.

அதற்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவையும் பெற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையிலேயே, மற்றுமொரு கொள்கை பிரகடனத்தை “நந்தசேன” வெளியிடவுள்ளார் என அந்த உள்வூட்டுத் தகவல்கள் தெரிவித்தன.

அதே நேரத்தில், சிங்கள பௌத்த பிரபுத்துவத்தை கொண்டிருக்கும் நந்தசேனவின் கருத்துகள், எரியும் நெருப்புக்கு எண்ணெயை ஊற்றுவதாக அமைந்துவிடும் என்பதனால், நந்தசேனவின் வாய்க்கு பூட்டுப்போடப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

இதேவேளை, இனவாத ஒத்துழைப்பு வழங்கும் விமல், உதய கம்பன்பில ஆகிய இருவரும் நந்தசேனவுக்கு திரைமறைவில் ஆதரவு நல்கிவருகின்றனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகையால், நந்தசேனவின் தரப்பினருக்கும் மொட்டுவின் தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது என, அறியமுடிகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் நந்தசேன கோத்தாபய ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நிலைமை இவ்வாறிருக்கையில், நந்தசேனவுக்காக விமல் வீரவன்சவும், உதய கம்பன் பிலரும் இனவாத கொள்கையுடன் கூடிய மாநாடுகள் இரண்டை, செப்டெம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது.

Last modified on Tuesday, 03 September 2019 01:25