Print this page

பகிடி வதைக்கு 10 வருட சிறை

September 01, 2019

பல்கலைக்கழகங்களில் கொடூர பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை    பல்கலைக்கழக மாணவர்களை சித்திரவதைக்குள்ளாக்குவோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2018 - 2019 ஆம் கல்வி ஆண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் சித்திரவதைக்கு உட்படுத்தும் அல்லது அவ்வாறான செயற்பாட்டுடன் தொடர்புபடும் மாணவர்களையும், இந்தச் செயற்பாட்டிற்கு ஒத்தாசை வழங்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் யாராக இருப்பினும் அவர்களையும் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.ரி.கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.  

 கொடூர பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும்,  இதற்கான ஒத்துழைப்புக்களை பொலிஸ் ஆணைக்குழுவினர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் வழங்குவதாக உறுதியளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   மாணவர் ஒருவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு மரணம் அல்லது ஊனமுற்ற நிலைக்கு உள்ளானால், சம்பந்தப்பட்ட பீடாதிபதி முதல் பொறுப்புக்கூற வேண்டிய அனைத்துத் தரப்பினர்களுக்கும் எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும்  உயர்கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளின் காரணமாக, வருடாந்தம் 2000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களை விட்டும் விலகிச் செல்வதாகவும் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.