Print this page

‘மணமகளை வன்புணர்ந்தால் திருமணம் முடிப்பது எப்படி’

September 02, 2019

தேர்தல் நெருங்கிவிட்டால், ஒருவருக்கொருவர் தூற்றிக்கொள்வது, வண்டவாளங்களை எடுத்துவிடுவது எல்லாம் இலங்கை அரசியலில், கைவந்த கலையாகும். விருப்பு வாக்குமுறைமை இருப்பதலால், ஒரே மாவட்டத்தில், ஒரேதொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது கட்சியைச் சேர்ந்தவர் என்றுகூட பார்க்காமல், மனைவி, குடும்பத்தையே நடுவீதியில் இழுத்து வீசிவிடுவர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படாத நிலையில், ஒரு கட்சிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ளன. இதுதொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், தயாசிறி ஜயசேகர எம்.பி, குருநாகலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு, மிகவும் வித்தியாசமான முறையில் தன்னுடைய கருத்தை எடுத்துரைத்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, கட்சிகள் இரண்டை ஒன்றோடு ஒன்றாக்குவதற்கான தயார் படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், கட்சியை இரண்டாகப் பிளவுப்படுத்துவதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டன.

கட்சியை, பிளவுப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படக்கூடாது. அதற்கு யாரும் இடமளிக்கவும் கூடாது. “ஒரு சந்திக்கு வரநினைக்கும் போது, கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தி, பொதுமக்களின் சிந்தனையில் குழப்பத்தை ஏற்படுத்தவேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார். “தற்போது திருமணம் முடிக்க தயாராகும் நிலையில், மணப்பெண் விட்டுவிலகிச் சென்று, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால், அப்பெண்ணை திருமணம் முடிக்க முடியுமா” என்றும் வினவினார்

. “நாங்கள் இன்னும் இருகிற்றோம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை புதைப்பதற்கு முடியாது” என்றார்.

Last modified on Saturday, 07 September 2019 12:38