Print this page

ஸ்ரீலங்கன் விமானங்களில் மடி கணினிக்கு தடை

September 13, 2019

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஆப்பிள் மேக் புக் புரோ என்ற கையடக்க கணினியை விமானத்தில் கொண்டு செல்ல ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தடை விதித்துள்ளது.

ஆப்பிள் மேக் புக் புரோ கணினியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படும் ஆவணம் இல்லாத பட்சத்தில், அதனை தமது விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படாது என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பிரிவு நேற்றைய தினம் (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் 15 அங்குல மேக் புக் புரோ (Apple Macbook Pro) கணினியின் பேட்டரி அளவுக்கு அதிமாக வெப்பமாவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாகவும், இவ்வாறு பிரச்சனைக்குரிய கணினிகள் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்பிள் மேக் புக் புரோ கணினி, அபாயகரமானதா என்பதை அந்த நிறுவனத்திடம் உறுதி செய்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

விமான நிலையங்களில் மேக் புக் புரோ கணினி தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆராயும் பட்சத்தில், அந்த கணினியின் பேட்டரி குறித்து மீளாய்வு செய்துகொண்ட ஆவணங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

ஆப்பிள் மேக் புக் புரோ (Apple Macbook Pro) கணினியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத பட்சத்தில், அதனை தமது நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படாது என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆப்பிள் கணினியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்வதற்காக கீழ் காணும் இணையத்தள முகவரியை பயன்படுத்தி கொள்ளுமாறும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

https://support.apple.com/en-hk/15-inch-macbook-pro-battery-recall?pub=autodetect