Print this page

புலிகளை ஒழித்த கோத்தா வடக்கு,கிழக்கு நீதிமன்றில் ஆஜராகமாட்டார்

September 24, 2019

 விடுதலைப் புலிகளை தோற்கடித்த காலத்தில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக தான் பதவிவகித்தமையால், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை 27ஆம் திகதியன்று தன்னால் ஆஜராகமுடியது என, கோத்தாபய ராஜபக்ஷ, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

வடக்கு, கிழகிலுள்ள நீதிமன்றங்களை தவிர, நாட்டிலுள்ள எந்தவொரு நீதிமன்றத்திலும், ஆஜராகி சாட்சியமளிக்கும் வகையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளைப் பிறப்பித்துள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் 2011 ஆம் ஆண்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கில், எதிர்வரும் 27ஆம் திகதி ஆஜராகுமாறு, அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

அந்த அழைப்பாணையை இடைநிறுத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (24) இடைக்கால தடையுத்தரவையையும் பிறப்பித்திருந்தது. அந்த தடையுத்தரவுடனேயே மேற்கண்ட கட்டளையையும் பிறப்பித்திருந்தது.

காணாமல் ஆக்கப்பட்ட லலித், குகன் ஆகிய இருவரின் உறவினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பில், கோத்தாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்ததன் பின்னரே, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தீபாலி விஜேசுந்தர மேற்கண்டவாறு இடைக்கால தடையை விதித்து, கட்டளையைப் பிறப்பித்தார்.

கோத்தாவின் மனுவை, நீதியரசர்களான தீபாலி விஜேசுந்தர மற்றும் அசல வேங்கப்புலி ஆகியோரே இன்று (24) ஆராயவிருந்தனர். எனினும், நீதியசர் அசல வேங்கப்புலி மனுவை ஆராய்வதிலிருந்து விலகிச்சென்றார்.

கோத்தாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நீதியரசர் தீபாலி விஜயசுந்தர, அம்மனுவை ஆராய்ந்தார். மனு ஆராயப்பட்டபோது, சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி வசந்த பெரேரா, “கோத்தாவின் கோரிக்கை தொடர்பில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை” என்றார். அதன்பின்னரே மேற்கண்ட இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் இந்த இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும்.

ஆட்கொணர்வு மனுவில், பிரதிவாதிகளாக அன்றிருந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, அன்றைய காலப்பகுதியில் யாழ்.

இராணுவ தளபதியாக இருந்த மஹிந்த ஹத்துருசிங்க, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, முன்னாள் பொலிஸ் மா அதிகர் என்.கே. இளங்ககோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை டிசெம்பர் மாதம் 3ஆம் திகதியன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

Last modified on Friday, 27 September 2019 02:49