Print this page

புலிகளை ஐ.நாவில் காட்டினார் பாக்.பிரதமர்

September 28, 2019

ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செப்டம்பர் மாதம்11 ஆம் திகதி 2001 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய எதிர்ப்பு அதிகமாகிவிட்டது. ஆனால் தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது என்று விடுதலை புலிகளை முன்வைத்து கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசுவதற்கு முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தீவிரவாததிற்கு எதிராக உலகம் ஓரணியில் திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். பிளவு இல்லாமல் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்வது தான் இந்தியாவின் செய்தி என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து ஐநா சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசுகையில், "ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெரிய தொகை ஏழை நாடுகளை விட்டு வெளியேறி உலகின் பணக்கார நாடுகளை அடைகிறது, இது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்துகிறது. இது வளரும் உலககுக்கு பேரழிவை தரும். இதுதான் உலகில் அதிக வறுமையையும் இறப்பையும் ஏற்படுத்துகிறது.

செப்டம்பர் மாதம் 11ம் தேதி 2001ம் ஆண்டு நடந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய எதிர்ப்பு அதிகமாகிவிட்டது. அது ஏன் தொடங்கியது? ஏனென்றால் சில மேற்கத்திய தலைவர்கள் பயங்கரவாதத்தை இஸ்லாத்துடன் ஒப்பிட்டு, இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் தீவிர இஸ்லாம் என்று அழைத்தனர்.

எந்த மதமும் கிடையாது.

தீவிர இஸ்லாம் என்றால் என்ன? ஒரே ஒரு இஸ்லாம் மட்டுமே உள்ளது, தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது. இந்த இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்வதும் இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு முக்கிய காரணம். இது இஸ்லாமியர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மதத்தை குறைகூற முடியுமா

உலகில் செப்டம்பர் 2001க்கு முன்பு பெரும்பான்மையான தற்கொலைத் தாக்குதல்களை இந்துக்களாக இருந்த தமிழ் புலிகளால்(விடுதலை புலிகளால்) நடத்தப்பட்டது. அப்போது இந்து மதத்தை யாரும் குறை கூறவில்லை. அது மிகவும் சரியானது. இலங்கையில் நம்பிக்கை இழந்த மக்கள் செயத விஷயங்களுக்காக இந்து மதத்தை எப்படி தொடர்புபடுத்த முடியும்? எனவே தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. மேற்கு உலகம் இஸ்லாம் குறித்து தவறான புரிதலை கொண்டுள்ளது. இஸ்லாமிய தீவிரவாதம் என்று வெறுப்பு உருவாக்கப்படுகிறது" இவ்வாறு கூறினார்.