Print this page

வித்தியா கொலை வழக்கில் மீண்டும் முக்கிய உத்தரவு

September 29, 2019

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து ஒக்டோபர் 10ம் திகதிக்கு முன்னர் மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. முதலாவது சந்தேகநபர் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க முன்னிலையானார். இரண்டாவது சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளதால் மன்றில் முன்னிலையாகவில்லை.

வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார். வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ். மேல் நீதிமன்றம் கடந்த தவணையில் உத்தரவிட்டிருந்தது.

அது தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவு சார்பில் முன்னிலையான அதிகாரியிடம் மன்று கேள்வி எழுப்பியது. எனினும் அவர் விசாரணைகள் நிறைவடையவில்லை என்று மன்றுரைத்தார். அதனால் விசாரணையை விரைவுபடுத்தி உரிய அறிக்கையை வரும் 10ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், அன்றுவரை வழக்கு விசாரணைகளை ஒத்திவைத்தார்.

இதேவேளை, இரண்டாவது எதிரி சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் உள்ளார் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அதன் உண்மைத் தன்மை தொடர்பில் வெளிப்படுத்தப்படவில்லை. அவர் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர் என்று அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் கடந்த தவணையின் போது மன்றுக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Sunday, 29 September 2019 02:44