Print this page

ரணில் உடும்புப்பிடி- மஹிந்த அணி ஆதரவாம்

November 20, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியையோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையோ விட்டுக்கொடுப்பதற்கு தான் தயாரில்லை என்று ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இதனால், ஐக்கிய தேசியக்கட்சி மீண்டும் பிளவுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க முடிவெடுத்துள்ளார்.

இது தொடர்பில், ஜனாதிபதிக்கு நாளை (20) கடிதம் மூலம் அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்கவுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் என்றும், புதிய தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் என்றும் சஜித் ஆதரவு அணி எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனக்கு விசுவாசமான எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்திய ரணில் விக்கிரமசிங்க, எக்காரணம் கொண்டும் தான் தலைவர் பதவியையோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையோ விட்டுக்கொடுக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பக்கபலமாக மஹிந்த அணி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, சஜித் ஆதரவு அணி உறுப்பினர்கள் மாற்று நடவடிக்கையில் இறங்கக்கூடும் என்றும், அதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன என்றும் கூறப்படுகின்றது.