Print this page

தமிழ் பெயர்கள் “மை” பூசி அழிப்பு

November 23, 2019

இலங்கையில் கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் ஊடாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள ஊர்களின் பெயர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இலங்கையில் தமிழ் மொழி புறக்கணிப்புக்கள் இடம்பெற்று வருவதாக குற்றம்சாட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகைகளில் உள்ள தமிழ் மொழி அழிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று சில பகுதிகளில் தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, இலங்கை அரச இலட்சிணையுடன் சிங்கள மொழியில் மாத்திரம் பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள படங்களும் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.