Print this page

மட்டக்களப்பு, மன்னாரில் நால்வர் சடலங்களாக மீட்பு

November 25, 2019

மட்டக்களப்பு மற்றும் மன்னாரில், கடலில் மூழ்கிய நிலையிலும், நீரில் மூழ்கிய நிலையிலும் நால்வர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். 

மட்டக்களப்பில்...

மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுகேணிபகுதியில்  நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மூன்று இளைஞர்கள் இன்று (25) பிற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீன் பிடிப்பதற்காக சென்ற இளைஞர்களில் 4 பேர் நீரில் மூழ்கிய நிலையில், ஒருவர் உடனடியாக அப்பகுதி மக்களால் காப்பாற்றப்பட்டிருந்தார்.

அதனையடுத்து,  காணாமல் போன மூன்று பேரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே குறித்த மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மன்னாரில்...

மன்னார் தாழ்வுபாடு பகுதியில், மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று இன்று  (25) இடம்பெற்றுள்ளது.

மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பெப்சிகர் பீரிஸ் (23) என்ற இளைஞன் சக மீனவருடன் இன்று காலை தாழ்வுபாடு கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

குறித்த படகினை ஓட்டிச் சென்ற இளைஞன் படகில் இருந்து திடீரென கடலில் வீழ்ந்துள்ளார். உடனடியாக சக மீனவர் காப்பாற்ற முயற்சி செய்ததோடு, ஏனைய மீனவர்களுக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, மீனவர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இளைஞனின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.