Print this page

இந்தியா ஒத்​துழைக்கும்- கோத்தாவிடம் ஜெய்சங்கர்

November 29, 2019

 

இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை இன்று (29) முற்பகல் புதுடில்லியில் சந்தித்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இந்திய பிரதமரின் அழைப்பையேற்று தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளமை குறித்து இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அயல் நாடுகளான இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே காணப்படும் நீண்டகால நட்புறவு ஜனாதிபதி அவர்களின் இந்த பயணத்தின் ஊடாக மேலும் பலப்படுமென தான் நம்புவதாக குறிப்பிட்ட இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுமெனவும் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்திகளை நோக்காகக் கொண்ட பரஸ்பர நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய புதிய அணுகுமுறையினூடாக இந்திய - இலங்கை தொடர்பினை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமென்பது பிரதமர் நரேந்திர மோடியின் எதிர்பார்ப்பாகுமென அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது தெரிவித்தார். இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக ஒத்துழைப்புகள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்த இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், தரமான வர்த்தக கட்டுப்பாட்டு முறைமையொன்று காணப்பட வேண்டியது அதற்கான அடிப்படை தேவையாகும் எனவும் இதனூடாக வெளிநாட்டு முதலீடுகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.

இந்தியாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடியினால் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இரு நாடுகளுக்குமிடையிலான நட்பினை மேலும் பலப்படுத்த தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜெயசுந்தர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க,  இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து மற்றும் இந்து சமுத்திர வலய ஒன்றிணைந்த செயலாளர் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்

இதனிடையே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தெவோல் நேற்று மாலை ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களை சந்தித்து உரையாடினார்.