Print this page

ஜனாதிபதியை கொலை செய்ய சதி- சமல் விசேட அறிவிப்பு

December 06, 2019

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிலரைப் படுகொலை செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பற்றிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

சீன அரசாங்கத்தால், உதவியாக வழங்கப்பட்ட, 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 187 மோட்டார் சைக்கிள்களை, நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, கொழும்பு பொலிஸ் களப்படைத் தலைமையகத்தில், நேற்று (05) இடம்பெற்றது.

இதில், இந்நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷேன் ஸூ சென்க் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பொலிஸ் ஊடகப் பிரிவு இரத்து செய்யப்படவில்லை என்றும் இராணுவம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்காகவும், ஒரேயோர் ஊடக மத்திய நிலையமொன்று நிறுவப்பட்டுள்ளது என்றார்.

அங்கு கருத்துத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், டிசெம்பர் மாதமானது, பல்வேறு உற்சவங்கள், கொண்டாட்டங்கள் உள்ள மாதமென்பதால், இம்மாதத்துக்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ​பொறுப்பு, அரசாங்கத்துக்கு உள்ளதென்றும் அதற்கான வேலைத்திட்டங்கள், ஏற்கெனவே நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.