Print this page

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் 2ஆவது நாளாக ஆஜர்

December 09, 2019

நவம்பர் 25 ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இரண்டாவது நாளாக இன்று (09) ஆஜராகியுள்ளார்.

குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

அதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விடயங்களை முன்வைத்தனர்.

அதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி குறித்த அதிகாரி வாக்குமூலம் வழங்க வேண்டும் என சுவிஸ் தூதரகத்துக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (08) இரவு முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.

அத்துடன்,  குறித்த பெண் ஊழியர், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் இன்று பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மேலும், வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.