Print this page

கோத்தாவை கொல்ல குண்டு வைத்தவர் விடுதலை

December 20, 2019

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை படுகொலை செய்வதற்கு குண்டு வைத்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கோத்தாப ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளராக பணியாற்றிய போது, அவர் பயணித்த வாகனத்திலேயே குண்டுகளை பொருத்தி அவரை, கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் படுகொலை செய்யமுயன்றார் என அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 

இந்த குற்றச்சாட்டின் கீழ், 14 வருடங்களாக சிறையிலிருந்தவரே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சியால் நேற்று (19) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

14 வருடங்களாக சிறையிலிருந்த சந்திரபோஸ் செல்வம் என்றழைக்கப்படும் மைக்கல் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் ஐவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. 

 

2006 யூலை முதலாம் திகதி அல்லது டிசெம்பருக்கு இடைப்பட்ட காலத்திலேயே, கோத்தாபய பயணித்த வாகனத்தில் குண்டுகளை பொருத்தி அவரை கொலை செய்வதற்கு முயன்றார் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தது. 

 

விடுதலை செய்யப்பட்ட  பிரதிவாதியின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வீ.தவராச, பிரதிவாதியின் வாக்குமூலத்தை தவிர, வேறு எந்தவொரு சாட்சிகளும் அவருக்கு எதிராக இல்லை. என்பதால், அவரை விடுதலை செய்யுமாறு கோரிநின்றார்.

முன்வைக்கப்பட்ட காரணங்களை கவனத்தில் கொண்டே, அவரை விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Last modified on Saturday, 21 December 2019 04:16