Print this page

ஈஸ்டர் தாக்குதல் ரிசாத்திடம் சி.ஐ.டி விசாரணை

December 30, 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியூதீனிடம், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) மூன்று மணிநேரம், இன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புதிய அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறியதன் பின்னர், முன்னாள் அமைச்சர்களான, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகி​யோர், பல்வேறான குற்றச்சாட்டுகளின் கீழ், சி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதன்பின்னர், அவ்விருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு அடுத்தப்படியாக, ரிசாத் பதியூதீன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலேயே அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வாக்குமூலமும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணைகளின் நிறைவில், அவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன், ஆஜர்படுத்தப்படக்கூடும் என, உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.