Print this page

படம் எடுத்த மாணவர்களை விடுதலை செய்ய முஸ்தீபு

கிரலாகல தூபியில் ஏறிப் புகைப்படங்கள் எடுத்தமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேரையும் விடுதலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸவுடன், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எதிர்வரும் 28ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாரென, அமைச்சர் ரிஷாட்டின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அமைச்சர் சஜித்திடம் அலைபேசியில் உரையாடிய அமைச்சர் ரிஷாட், மாணவர்கள் தவறுதலாக இச்செயலை மேற்கொண்டிருப்பதால், கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

அத்துடன், அநுராதபுர பொலிஸ் உயர் அதிகாரிகளுடனும் உரையாடிய அமைச்சர், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, அவர்களை விடுதலை செய்ய ஆவண செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த மாணவர்கள் 8 பேரும், பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Sunday, 27 January 2019 02:27