Print this page

ஷவேந்திரவுக்கு தடை- கூட்டமைப்பு வரவேற்பு

February 15, 2020

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று (15) அதிகாலை அறிக்கை ஒன்றை விடுத்து இந்த விடயத்தை வரவேற்றுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலமாக பொறுப்புகூறலை தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசாங்கத்தின் கண்களை இந்த தடை திறக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இந்த விடயத்தை தாம் கருதுவதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆகவே இலங்கை அரசாங்கம் இனியாவது சர்வதேச விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு இடமளிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.