Print this page

545 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

February 04, 2019

இலங்கையின் 71ஆவது தேசிய நாளை முன்னிட்டு, 545 சிறைக்கைதிகள் இன்று பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர்.

எனினும், இந்தப் பட்டியலில் அரசியல் கைதிகளோ, பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரோ இடம்பெறவில்லை.

தேசிய நாளை முன்னிட்டு 4 பெண்கள் உள்ளிட்ட 545 சிறைக்கைதிகள் இன்று பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர் என்று நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று பொதுமன்னிப்பு அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அவருக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று மகாசங்கத்தினர், அரசியல் கட்சிகள் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்க, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட உள்ளிட்டவர்கள் அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கூடாது என வலியுறுத்தினர்.

இந்தநிலையில், இன்று விடுவிக்கப்படவுள்ள சிறைக்கைதிகளின் பட்டியலில் ஞானசார தேரரின் பெயர் இடம்பெறவில்லை.

அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என்று மன்னார் பிரஜைகள் குழு, ஜனாதிபதியிடம் கோரியிருந்த போதும், பொதுமன்னிப்பு அளிக்கப்படவுள்ளவர்களின் பட்டியலில் அரசியல் கைதிகள் எவரும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.