Print this page

சம்பிக்க, வெல்கமவும் மனுத்தாக்கல்

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஆட்சேபித்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைத்து கடந்த மார்ச் 2ஆம் திகதி ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி வௌியிட்ட பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரனவினால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதங்களுக்குள் புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்ற போதிலும், ஜூன் மாதம் 20 ஆம் திகதியானது 3 மாதங்களை கடந்த திகதியாகும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனூடாக அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் சட்டத்தரணிகள், உயர்நீதிமன்றத்தில் நேற்று நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்தனர்.

ஜூலை 20 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலையும் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் மார்ச் மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலையும் செல்லுபடியற்றதாக்குமாறு குறித்த அடிப்படை உரிமை மனுவில் கோரப்பட்டிருந்தது.

Last modified on Saturday, 09 May 2020 13:59