Print this page

சுடரை தட்டி வீழ்த்தி அராஜகம் (வீடியோ)

யாழில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபத்தினை இராணுவத்தினர் தட்டி விழுத்தி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். 

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்துக்கு முன்பாக சுடரேற்றபட்ட சுடரினையே, இராணுவத்தினர் தட்டி விழுத்தினர். 

இன்று, பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தின் முன்பாக முள்ளிவாய்காலில் உயிரிழந்த மக்களின் நினைவாக அந்தக் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் தனது கட்சி உறுப்பினர்கள் சிலருடன் சுகாதார விதிமுறைகளை பேணி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அவ்வேளை அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் மற்றும் எட்டு இராணுவத்தினர், “ஏன் தீபம் ஏற்றுகின்றீர்கள்? அதற்கு அனுமதி இல்லை உங்களை கைது செய்வோம்” என, மிரட்டி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முனைந்தனர்.

அதற்கு கட்சியின் செயலாளர் நாம் சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே அஞ்சலி செலுத்துகின்றோம். உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த தடையில்லை என கூறி, அஞ்சலி நிகழ்வை நடத்தினார்கள். 

சிறிது நேரத்தில், அஞ்சலி நிகழ்வை முடித்து விட்டு, தீபத்தை அகற்றி விட்டு உள்ளே செல்லுமாறு பொலிஸார்  அறிவுறுத்தியமைக்கு அமைவாக, ஏற்றப்பட்ட சுடர் எரிந்து கொண்டு இருந்ததனால், அதனை அணைக்காது, அது அணைந்தப் பின்னர் அதனை அகற்றுகின்றோமென, கட்சியின் செயலாளர் கூறி, அவர்கள் அலுவலகத்துக்குள் சென்றுள்ளனர்.

அதனையடுத்து, அவ்விடத்தில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினரும் பொலிஸாரும், சில நிமிடத்தில் இராணுவத்தினர் மட்டும் தமது ஜீப் ரக வாகனத்தில் திரும்பி வந்து, முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் நினைவாக ஏற்றப்பட்ட தீபத்தை அணைத்து, அதனை தூக்கி வீசி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். 

இறந்தவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட தீபத்தை அணைத்து, அதனை தூக்கி வீசிய இராணுவத்தின் அநாகரிக செயற்பாடு, உயிரிழந்தவர்களின் ஆத்மாக்களை அவமதிக்கும் செயற்பாடென, முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினர் தெரிவித்தனர்.

Last modified on Tuesday, 19 May 2020 02:46