Print this page

திரையரங்குகளை திறக்க அனுமதியில்லை

கொழும்பு உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற போதிலும், திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், சினிமா திரையரங்குகள் முழுமையாக குளிரூட்டப்பட்டவை என்பதால் அவை எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட வேண்டும்.

பொது இடங்கள் திறக்கப்படலாம், எனினும், சினிமா திரையரங்குகள் குறித்து சுகாதார அதிகாரிகள் இன்னும் ஒரு முடிவை எடுக்கவில்லை, என்று அவர் கூறினார்.

இந்நிலையில், செயல்படக்கூடிய பொது இடங்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் சுகாதார அமைச்சின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட நாடு முழுவதும் நாளை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுல்செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.