Print this page

ஏன் வழக்கு தாக்கல் செய்யவில்லை- ரணில் விளக்கம்

பொதுத் தேர்தலை நடத்துவதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லப்படியற்றதாக அறிவிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை ஏன்? தாக்கல் செய்யவில்லை என அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெளிவுப்படுத்தியுள்ளார். 

தமது கட்சி வேறு ஒரு நிலைப்பாட்டை கொண்டிருந்ததன் காரணரமாகவே வழக்குத் தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்திற்கு இன்று விஜயம் செய்ய முன்னாள் அமைச்சர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுப்படியற்றதாக அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை விசாரணைக்கு எடுக்காது நிராகரிக்க உயர் நீதிமன்றத்தில் ஐந்து நீதியரசர்கள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு தொடர்பாக ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை போன்று மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த விடயம் சம்பந்தமாக அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்யவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் நீதியரசர்கள் அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி, இந்த விடயம் சம்பந்தமாக கொண்டிருந்த நிலைப்பாடு உறுதியாகியுள்ளது.

இந்த விடயம் சம்பந்தமாக அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்ய முயற்சித்த போது, தான் அதன் சட்ட ரீதியான பின்னணியை ஆராய்ந்த பின்னர், அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்வது பொருத்தமற்றது என தீர்மானித்ததாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.