Print this page

ஈஸ்டர் தாக்குதல் ஏன் நடத்தினர்- மனம் திறந்தார் மைத்திரி

 ஈஸ்டர் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹிங்குரங்கொட தேர்தல் தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அணியின் மாநாட்டில் நேற்று (22) கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தை முடக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றார்.

தனது ஆட்சிக்காலத்திலேயே போதைப்பொருள் ஒழிப்புச் செயற்பாடுகள் வலுவாக இடம்பெற்றனவெனவும்,  அவற்றை தடுப்பதற்காகவே தான் மரண தண்டனையை அமுல்படுத்த முன்வந்திருந்ததாகவும், போதைப்பொருள் வியாபாரிகளே அதற்கு எதிராக நீதிமன்றம்​ சென்றிருந்தனர் எனவும் சாடினார். 

அவ்வாறான சூழ்நிலைக்கு முகம்கொடுத்த முதலாவது ஜனாதிபதியாக  தானே உள்ளதாக தெரிவித்த அவர்,  மாகதுரே மதூஷ் போன்ற பாதாள குழுவின் முக்கிய உறுப்பினர்களை கைது செய்தமையால் தன்னை கொலைச் செய்வதற்கான பாதாள குழு உறுப்பினர்களால் மேற்கொள்படும் முயற்சிகள் அன்றுபோலவே இன்றும் தொடர்கிறது என்றார்.

அத்தோடு, தான் பொலன்னறுவையை மீள உயிர்ப்பித்துள்ளதாகவும்,  அங்குள்ள அபிவிருத்திச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க தனக்கான அதிகாரத்தை பெற்றுத்தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.