சர்ச்சைக்குரிய ஆடை அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கை பொலிஸார் மீளபெற்றுக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்கிலிருந்தும் மேற்படி பெண்ணை விடுவிப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்த வழக்கு மஹியங்கண நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்ட மா அதிபரின் அறிவுரைக்கு அமைவாக, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாதென்றும், அதனால் வழக்கை மீளப் பெற்றுக் கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்கிலிருந்தும் மேற்படி பெண்ணை விடுவிப்பதாக நீதவான் அறிவித்துள்ளார்.
கண்டி- கொலங்கொட எனும் பிரதேசத்தைச் சேர்ந்த மஸாஹிமா எனும் பெண், தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் என்றும், அதன் மூலம் அவர் பௌத்த மதத்தை அவமதித்து விட்டார் எனவும் தெரிவித்து கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் 17ம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த பெண், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து 14 நாட்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பெண் சார்பில் கொழும்பை சேர்ந்த சட்டத்தரணி தம்பதிகள் ஏ.எம்.எம். சறூக் மற்றும் பாத்திமா நுஸ்ரா சறூக் ஆகியோர் மன்றில் முன்னிலையாகயிருந்தனர்.
கட்டணம் எதனையும் பெறாமல் மேற்படி சட்டத்தரணிகள் இந்த வழக்கில் முன்னிலையாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.