Print this page

13க்கு என்ன நடக்கும்? வாய் திறந்தார் டக்ளஸ்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக தேவையற்ற குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசனம் வெளியிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்திற்கு இதுவரை அவ்வாறான நோக்கங்கள் எதுவும் கிடையாது எனவும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை யாரும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை இன்று நடைபெற்ற நிலையில், 19 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நீக்கும் வகையில் வகையில் 20 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் இந்தியாவின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தினையும் இல்லாமல் செய்வதற்கு புதிய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக சில தரப்புக்களினால் வெளியிடப்பட்டு வருகின்ற கருத்துக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

புதிய அரசாங்கம் தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தினை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் நலன்களை அடைந்து கொள்ள முயற்சிக்கும் குறுகிய நலன் கொண்ட அரசியல் தரப்புக்களே இவ்வாறான உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரவ விடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.