Print this page

மைத்திரிக்கு என்ன செய்யலாம்- பொன்சேகா புது விளக்கம்

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த மைத்திரி, பொய் கூறினார் என சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆகையால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, தற்போதைய அரசாங்கம் புனர்வாழ்வளிக்க வேண்டுமெனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார். 

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு அப்போதிருந்த அரசாங்கமே, பொறுப்பேற்க வேண்டுமென நான் அப்போதே கூறியிருந்தேன்” என்றும் அவர் கூறினார்.

“அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றாலும், அப்போதைய எங்களது அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சை வைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, இந்தத் தாக்குதல் தொடர்பில் அறிந்திருந்தும் தடுக்கத் தவறியவர் என்பதால், அவரே இதில் முதலாவது குற்றவாளி.

“பாதுகாப்பு அமைச்சராக அவர் தேசியபாதுகாப்புக்கு தேவையான எந்தவொரு தீர்மானங்களையும் எடுக்கவில்லை. எங்களது பக்கத்தில் அவரை வைத்திருப்பது பயனற்றது என்பதாலேயே அவரை ஆளுங்கட்சிக்கு வழங்கியிருக்கிறோம். அவருக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டும்.

“தேசிய பாதுகாப்புச் சபையையும் பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் அவர் கூட்டவில்லை . உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிக்கு தகவல் வழங்கபட்டிருந்தது. ஆனால், அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தாக்குதல்கள் தொடர்பில் அவருக்கு முன்கூட்டிய தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

“தாக்குதல் நடக்கும்போது, மைத்திரி சிங்கப்பூரில் இருந்தார். காலையில் தாக்குதல் நடைபெற்றது. ஆனால், மைத்திரி அன்றிரவு 12 மணிக்கே நாட்டுக்கு வந்திருந்தார். உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் நடைபெற்றவுடன் நீங்கள் ஏன் நாட்டுக்கு வரவில்லை என்று, மைத்திரியிடம் கேள்வி கேட்டிருந்தேன். சிங்கப்பூரிலிருந்து பகல் மூன்றுக்கும், இரவு 9 மணிக்கும் இலங்கைக்கு வரும் விமானத்தில், தனக்கு சீட் கிடைக்கவில்லை” என்றார். 

“உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்கிய மைத்திரி பொய் கூறினார்.

“சிங்கப்பூரிலிருந்து வந்த விமானங்களில் சீட் இருந்ததா என நாம் ஆராய்ந்துப் பார்த்தோம். பகல் வந்த விமானத்தில் 13 சீட்களும் இரவு வந்த விமானத்தில் 30 சீட்களும் இருந்தது. ஜனாதிபதியாக இருந்தும் மைத்திரி பொய் கூறினார்” என்றும் அவர் மேலும் கூறினார்.

Last modified on Saturday, 22 August 2020 04:19