Print this page

சிறைகளில் 46 சிறுவர்கள்

விளக்கமறியல் சிறைச்சாலைகளில் உள்ள தாய்மார்களின் குழந்தைகளை விடுவிப்பது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாடோ புள்ளே தலைமையில் குறித்த கலந்துரையாடல் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாய்மார்களின் 46 குழந்தைகளை விடுவிப்பது தொடர்பில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இவ்விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாடோ புள்ளேவிற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 46 தாய்மார்களுடன் 5 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் தங்கியுள்ளதால் குறித்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாடோ புள்ளேயின் தலைமையில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Last modified on Tuesday, 25 August 2020 10:22