Print this page

சுற்றிவளைத்த பொலிஸார் மீது தாக்குதல்

September 09, 2020

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் இன்று (09) முற்பகல் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படும் வீடொன்றை பொலிஸார் முற்றுகையிட்டு, வீட்டின் உரிமையாளரை கைது செய்தபோது, அங்கிருந்த சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, பொலிஸார் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதோடு, இதில் 04 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கஞ்சா வியாபாரம் இடம்பெறுவதாக பண்டாரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த வீட்டை முற்றுகையிட்ட வேளையில் அங்கிருந்த  04 பெண்களும் 04 ஆண்களும் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்தியுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது உப பொலிஸ் பரிசோதகர்கள் இருவர், பெண் பொலிஸ் சார்ஜன்ட், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் 03 பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.