Print this page

கண்டியில் நடந்தது என்ன? தப்பிய பெண் கருத்து

September 21, 2020

கட்டிடம் இடிந்து சிறிது சிறிதாக கீழே விழுந்து கொண்டிருந்தது. என் மீதும் விழுந்தது. நானும் எனது மாமியும் ஆரம்பத்திலேயே மீட்கப்பட்டோம் என கண்டி - பூவெலிகட பகுதியில் இன்று காலை இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அதிகாலை 5 மணி இருக்கும். எமது வீட்டிற்கு அருகிலிருந்த 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அதன்போது ஏற்பட்ட சத்தத்தில் எழுந்து பார்க்கும் போது எனது சித்தப்பா மற்றும் அவரது மனைவி உறங்கிக்கொண்டிருந்த எமது வீட்டின் ஒரு பகுதியின் மீதே குறித்த கட்டிடம் விழுந்திருந்ததுடன் நாமிருந்த அறை பக்கமும் கட்டிடத்தின் சிறு பகுதிகள் சிதறி கிடந்தன.

கட்டிடம் இடிந்து சிறிது சிறிதாக கீழே விழுந்து கொண்டிருந்தது. என் மீதும் விழுந்தது. நானும் எனது மாமியும் ஆரம்பத்திலேயே மீட்கப்பட்டோம்.

மற்றைய அறையில் எனது சித்தப்பாவும் சித்தியும் அவர்களது ஒன்றரை மாத குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களது தொலைபேசிக்கு அழைத்த போதும் தொலைபேசி இயங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது குறித்த அனர்த்தத்தில் இருந்து மீட்கப்பட்ட மற்றுமொரு தாய் குறிப்பிடுகையில்,

அதிகாலை 5 மணியளவில் பாரிய சத்தமொன்று கேட்டதைத் தொடர்ந்து ஜன்னல் வழியாகவே பார்த்தோம். நாம் பார்க்கும் போது கட்டிடம் முழுமையாக இடிந்திருந்தது. நாம் கூச்சலிட்ட போதும் அருகில் வசித்தவர்களுக்கு சத்தம் கேட்கவில்லை.

119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்ததன் பின்னர் பொலிஸார் உடனடியாக வந்து எம் இருவரையும் மீட்டனர். எனினும் மற்றைய அறையிலேயே குழந்தையுடன் அதன் தாய் தந்தை உறங்கிக் கொண்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

Last modified on Friday, 25 September 2020 02:23