Print this page

‘கொரோனா மரணங்களை மறைக்கிறது அரசாங்கம்’

November 11, 2020

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை, அரசாங்கம் மறைப்பதாக, ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள எம்.பி ஹரின் பெர்ணான்டோ, நாட்டின் எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த தொற்றுநோய் சூழ்நிலையில், மக்கள் முகங்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பாக தெரிவிப்பதற்கு, ஓர் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.

நேற்று இரவு மாத்திரம், ராஜகிரிய, கம்பாஹா, குருநாகல் ஆகிய பகுதிகளில், 4 மரணங்கள் பதிவாகியிருந்தன என்றும் இது தொடர்பாக அறிவிக்கப்படவோ, இறந்தோரின் மொத்த எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படவோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் மரணச் சான்றிதழ், ஐக்கிய மக்கள் சக்தியிடம் உண்டு என்றும் அதில், இறப்புக்கு, கொரோனா வைரஸே காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்மூலம், நாட்டை கொரோனா வைரஸில் இருந்து காப்பதற்கான முயற்சியை, அரசாங்கம் கைவிட்டுள்ளது என்பது தென்படுவதாகவும் இது, நாட்டை பேரழிவுக்குள் இட்டுச் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.