Print this page

ஒரே ஒரு கேள்வி கேட்ட தடகள வீரருக்கு மரண தண்டனை?

November 11, 2020

கொரோனா காலத்தில் ஜிம்கள் மூடப்பட்டிருக்கும்போது வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டிருப்பது ஏன் என கேள்விகேட்ட தடகள வீரருக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்பு  இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா, இந்தியா போன்ற பெரிய நாடுகள் கொரோனாவால் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாதநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டது.

இந்நிலையில் ஈரான் நாட்டிலும் கொரோனா காரணமாக பொது இடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், புனித நகரமான மஷாத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜிம்களை மூடுவது வேடிக்கையானது என்று ஈரான் பாடிபில்டர் ரேஸா தப்ரிஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த பதிவு அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில் ஈரான் பொலிஸார் ரேஸா தப்ரிஸியை கைது செய்தனர். இதனை அடுத்து அவர் தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட குற்றத்துக்காக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ரேஸா தப்ரிஸி 2011 நியூசிலாந்து பாரா ஒலிம்பிக்கில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் ஆவர். மேலும் இவர் ஒரு ஊனமுற்ற தடகள வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.