Print this page

பிள்ளையானின் செயலாளர், சி.ஐ.டியினரால் கைது

November 12, 2020

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிள்ளையான் என்றழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசது​றை சந்திரகாந்தனின் செயலாளர் பூ.பிரசாந்தன், சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரயம்பதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள காரியாலயத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே, இன்றுக்காலை 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது காரியாலயத்துக்கு இன்று (12) காலை சென்றுகொண்டிருந்த வேளையிலேயே, கொழும்பிலிருந்து வருகைதந்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் இவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரயம்பதியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.