Print this page

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? மஹிந்தவை மாட்டிவிட்டார் மஹிந்த

November 23, 2020

 

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, பொதுமக்களை மீட்பதற்காக கப்பலொன்றை வழங்க பலம் வாய்ந்த நாடொன்று முன்வந்த நிலையில், அந்த கோரிக்கையை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்திருந்ததாக முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் இன்று (23) கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது பலம் வாய்ந்த நாடொன்றின் தூதுவர் ஒருவர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது, யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாப்பதற்காக கப்பலொன்றை வழங்க விரும்புவதாக குறித்த தூதுவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், மற்றுமொரு நாடு கப்பலை அனுப்புவதாக தன்னிடம் கூறியுள்ளது என குறித்த தூதுவரிடம் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து, அந்த கோரிக்கையை நிராகரித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த கோரிக்கை தொடர்பில் தான் ஆராய்வதாக, மஹிந்த ராஜபக்ஷ குறித்த தூதுவரிடம் தெரிவித்ததாக மஹிந்த சமரசிங்க சபையில் தெரிவித்தார்.

தூதுவர் அங்கிருந்து சென்றதன் பின்னர், தன்னை பார்த்து மஹிந்த ராஜபக்ஷ கப்பல் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணத்தை தெளிவூட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

”கப்பலை கொண்டு வர இடமளித்தால், அந்த கப்பலில் பொதுமக்கள் மட்டுமன்றி, விடுதலைப் புலிகளின் தலைவர்களும் ஏறுவார்கள். அப்படி விடுதலைப் புலிகளின் தலைவர்கள் ஏறினால், பெருங்கடலில் என்ன நடக்கும் என்பது எமக்கு தெரியாது. அதனால் தான் இப்படி கூறினேன். அந்த வேண்டுக்கோளை அப்போது தட்டிக் கழித்தேன்” என தன்னிடம் மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக மஹிந்த சமரசிங்க சபையில் குறிப்பிட்டார்.

அன்றைய தினம் வெளிநாடுகளினால் வழங்கப்பட்ட கப்பலை பெற்றுக்கொண்டிருந்தால், பிரபாகரன் தப்பிச் செல்வதற்கான வாய்ப்பு காணப்பட்டதாகவும், தலைவர் என்ற விதத்தில் சரியான தீர்மானத்தை அன்று அவர் எடுத்திருந்ததாவும் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.