Print this page

தாழமுக்க நிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

November 29, 2020

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்க நிலை அடுத்த 24 மணித்தியாலங்களில் விருத்தியடையக் கூடிய நிலைமை காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்தும் எனவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் ஊவா, மத்திய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும்  மழையுடன் கூடிய கால நிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் அதிக வேகத்துடன் காற்று வீசும் என்பதுடன் கடலில் கொந்தளிப்பு நிலை ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடற்படை மற்றும் கடற்றொழிலாளர்கள் இலங்கையின் கிழக்கு கடற்கரையின் ஆழ்கடல் பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.