Print this page

மஹர விவகாரம்; விசாரணைக்கு கோரிக்கை

November 30, 2020

சிறைக் கைதிகள் கொல்லப்பட்டதற்கும், காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்கும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் கடமை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மஹர சிறைக் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் தமக்கு நம்பிக்கையில்லை என்றும் எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், சிறைக் கைதிகள் படுகொலை செய்யப்படுவது ஜனநாயக விரோதமானது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.

கைதிகள் தமக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து மஹர சிறைச்சாலையில் 183 கைதிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைதிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்காது, துப்பாக்கிச் சூட்டு நடத்தியமை ஜனநாயக விரோதச் செயலாகும் என்றும் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.

Last modified on Monday, 30 November 2020 08:53