Print this page

”ரிவர்ஸ் மாத்திரையே காரணம்”

November 30, 2020

சிறைச்சாலைகளில் வன்முறை நிலைமைகள் ஏற்படுவதற்கு குழுவொன்றினால் கைதிகளுக்கு விநியோகிக்கப்படும் மனித இரத்தத்தை பார்க்கத் தூண்டும் ‘ரிவர்ஸ்’ என்ற ஒருவகை போதை மாத்திரைகளே காரணம் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் அந்த போதை மாத்திரைகளை விநியோகித்து வன்முறைகளை தூண்டுவதற்கு குறித்த குழுவினால் முயற்சிக்கப்பட்டதாகவும், அங்கு அந்த முயற்சி தடுக்கப்பட்ட நிலையிலேயே மஹர சிறைச்சாலையில் வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக சிறைச்சாலைகளில் வன்முறை நிலைமைகளை ஏற்படுத்தி தற்போதைய ஜனாதிபதிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச இதன்போது தெரிவித்துள்ளார்.

இதன்படி மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் கொவிட் நெருக்கடி நிலைமையால் ஏற்பட்டதாக பார்க்க முடியாது எனவும், அது திட்டமிட்டே உருவாக்கப்பட்டது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.