Print this page

வெளியேறுவோருக்கு உடனடி அன்டிஜன் பரிசோதனை

December 18, 2020

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் இருந்து வெளி இடங்களுக்கு செல்வோரை ‘ரெப்பிட் அன்டிஜன்’ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றுப் பரவல் நிலைமை தொடரும் காரணத்தினாலேயே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகைக் காலத்தில் மேல் மாகாணத்தில் இருந்து செல்வோர் ஊடாக வெளிமாகாணங்களிலும் தொற்றுப் பரவக் கூடும் எனவும், இதனால் அவர்களை அன்டிஜன் பரிசோதனைகளை உட்படுத்தும் வகையில் நடமாடும் பரிசோதனை வாகனங்களை ஈடுபடுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளில் பயணிப்பவர்களிடம் இந்தப் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தக் காலப்பகுதியில் மக்கள் சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி நடந்துகொள்வர்களாக இருந்தால் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்த வேண்டிய தேவை இருக்காது எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.