Print this page

மேல் மாகாணம் விரைவில் மாறும்

December 22, 2020



எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஒரு கொவிட் தொற்றாளரேனும் இனங்காணப்படாத மாகாணமாக மேல் மாகாணத்தினை மாற்றியமைக்க வேண்டும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (21) நடைபெற்ற, மீண்டும் கிராமத்திற்கான தேசிய வேலைத்திட்டத்தின் மேல் மாகாணத்திற்கான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சிக்கான பயணமும் வெற்றிகரமாக செயற்படுத்தப்படுவது மேல்மாகாணத்தில்தான்.

ஜனவரி மாதம் தொடக்கம் ஒரு கொவிட் தொற்றாளரேனும் இனங்காணப்படாத மாகாணமாக மேல் மாகாணத்தினை மாற்றியமைக்க வேண்டும். அப்படியிருந்தால் எமக்கு வெற்றிகரமான பாதையில் செல்ல முடியும்.

மேல்மாகாணத்தின் நீர் வளங்களை பாதுகாப்பது தொடர்பான ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன்மூலம் பாதுகாப்பான பயிர்த்தோட்டங்களை அமைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ,மேல்மாகாணம் செயலற்றதானால் முழு நாட்டிற்கும் அது பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும். பேலியகொட மீன்சந்தை மற்றும் மெனிங் பொதுச்சந்தை மூடப்பட்டதும் முழு நாட்டிற்கும் பாரியதொரு பாதிப்பினை ஏற்படுத்தியது.

மேலும், மேல்மாகாணத்தினை கேந்திர நிலையமாகக்கொண்டு முதலீடுகள் தொடர்பான வாய்ப்புக்கள் அமைகின்றன. அதனால் மேல்மாகாணத்தில் இந்த வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.