Print this page

பின்னிரவில் அரவம் தீண்டியதில் மரணம்

ஆழ்ந்த நித்திரையில் இருந்த சிறுவன் ஒருவனை, நள்ளிரவு ஒரு மணிக்குப் பின்னர், பாம்பொன்று தீண்டியதில் அச்சிறுவன் உயிரிழந்த சம்பவமொன்று, நோட்டன் ஒஸ்போன் தோட்டத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

12  வயதான ரொபட் தோபிய எஸ்கர் என்ற சிறுவனே, நேற்று (11) அதிகாலை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

ஏதோவொன்று சத்தமின்றி ஊர்ந்து செல்வதை உணர்ந்த பெற்றோர், நித்திரையிலிருந்து எழுந்து தேடியுள்ளனர். அப்போது, மகனின் கழுத்தில் பாம்பொன்று இருப்பதைக் கண்டுள்ளனர்.

அப்பாம்பை அடித்து வீசிவிட்டுவிட்டு, நித்திரைக்குச் சென்றுள்ளனர். அதன்பின்னர், அதிகாலை நான்கு மணியளவில் நித்திரையிலிருந்து எழுந்த மகன், தனக்கு மயக்கம் வருவதைப்போல இருப்பதாகக் கூறியுள்ளார்.

விரைந்து செயற்பட்ட பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும், அவரை, டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், செல்லும் வழியிலேயே அச்சிறுவன் உயிரிழந்துவிட்டான்.

நோட்டன் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில் 7ஆம் வகுப்பில்  கல்வி பயிலும் ரொபட் தோபிய எஸ்கர் 'பசித்தவன்' குறுந்திரைப்படத்திலும் நடித்துள்ளார்  

மேலும்இ சிறுவனைத் தீண்டிய பாம்பு, இறந்த நிலையில் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. சிறுவனின் சடலத்தை  பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது, பாம்பு தீண்டி விசமானதால் சிறுவன் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது எனத் தெரிவித்த நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்தனர்.