Print this page

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கியமான இடமாகவுள்ளது: இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கியமான இடமாகவுள்ளது. எமது திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைந்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்தார்.

மடு தேவாலய பகுதிகளில் யாத்திரைக்காக வருகை தரும் யாத்திரிகர்களுக்கான தங்குமிட விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று  வியாழக்கிழமை  மாலை   சுற்றுலாத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் மடு பிரதேசத்தில் இடம் பெற்றது.

இந்திய அரசின் நன்கொடையின் கீழ் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 144 வீடுகளை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு அமைக்க  மேற்படி அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்த பின் உரையாற்றுகையிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கணடவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகமே கொவிட்-19 தொற்றினால் முடங்கியுள்ள நிலையில் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் பாரிய  முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றறோம். 

இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை மிக நெருக்கமாக பேணி வருகின்றோம். வீட்டுத் திட்டங்களை வழங்கியதுடன், சுகாதாரத் துறைக்கும் பங்களிப்பை மேற்கொண்டுள்ளோம். உதாரணமாக சுவசெரிய அம்புலன்ஸ் வண்டிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளோம். இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளமை தொடர்பில் இந்திய அரசாங்கம் மகிழ்ச்சி அடைகின்றது என அவர் தெரிவித்தார்.

இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்பட்ட நிலைமாற்று வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க , நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், கே.திலீபன், யாழ். இந்திய துணைதூதுவர் எஸ்.பாலசந்திரன்  உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.