இலங்கையில் 2019ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியே என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு கொழும்பில் நேற்று(06) நடைபெற்றது.
அங்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர கருத்து வெளியிடுகையில்,
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இருந்து செயற்பட்ட பிரதான சூத்திரதாரியை கண்டுபிடித்துவிட்டோம். அவர்கள் நௌபர் மௌலவி மற்றும் அஜ்புல் அக்பார் என்கிறவர்கள். பக்டாடி என்பவர்தான் ஈராக்கில் ஐ.எஸ் .என்கிற வாதத்தை ஏற்படுத்தினவர். நௌபர் மௌலவி என்பவர் சஹ்ரானை உருவாக்கியவர். சஹ்ரான் 2016ஆம் ஆண்டில் இதில் இணைந்துள்ளார். பக்டாடியுடன் 2016இல் இணைந்த நவ்பர் மௌலவி இலங்கையிலும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பரப்பினார்.
அவர் தற்போது தடுப்பில் உள்ளார். பொலிஸாரின் விசாரணையில் அஜ்புல் அக்பார் மற்றும் நௌபர் மௌலவி ஆகிய இருவருமே இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருப்பது தெரியவந்துள்ளது. சஹ்ரான் தற்கொலை தாக்குதலை நடத்திவிட்டார். தற்போது 32 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை அனுப்பிவைத்திருக்கின்றோம். அத்துடன் 211 பேர் தற்சமயம் தடுப்பில் உள்ளனர். 75 பேர் தொடர்ச்சியான விளக்கமறியலில் உள்ளனர். இவர்களுக்கு எதிராகவும் விரைவில் வழக்கு தாக்கல் செய்யப்படும். எதிர்வரும் நாட்களிலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுகின்ற சந்தர்ப்பத்தில் இதே நடவடிக்கை எடுக்கப்படும் என்றதோடு,
இந்தியாவில் தலைமறைவாக உள்ளார் எனக் கூறப்படும் சாரா ஜாஸ்மின் மற்றும் அபு இன் உள்ளிட்டவர்கள் குறித்த விசாரணையின் தற்போதைய நிலவரம் என்ன என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்,
சாரா ஜாஸ்மின் உயிரிழந்துவிட்டாரா என்பது இப்போது கூறமுடியவில்லை. முதலாவதாக நடத்தப்பட்ட மரபணுப் பரிசோதனையில் அது உறுதிசெய்யப்படவில்லை. சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின் பெற்றுக்கொள்ளப்பட்ட சடலங்களில் பெற்ற மரபணுவுடன் சாரா ஜாஸ்மினின் தாயாரின் டீ.என்.ஏ பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் பொருத்தமாகவில்லை. ஆகவே, புதைக்கப்பட்ட சடலங்ளை மீண்டும் தோண்டியெடுத்துதான் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். சாரா ஜாஸ்மின் உயிரிழந்திருப்பது உறுதியாகாவிட்டால், சர்வதேச பொலிஸார் ஊடாக இந்தியாவின் உதவியை பெற்று அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.