Print this page

பெண் தலைமைத்துவ மீனவ குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: வடபகுதி மீனவர் அமைப்புக்கள் கோரிக்கை

கடந்த சில தினங்களாகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் சாதகமான பதில்களை வழங்கியிருப்பது தொடர்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் கடல் தொழில் நிலையம் என்பன இணைந்து யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.

குறித்த சந்திப்பின் போது வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் உள்நாட்டு படகுகளை மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்தார்.  இக்கருத்தினை எதிர்த்து குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது இழுவை மடி தொழில் இந்திய ரோலர் படகுகளைக் கொண்டு மீன் பிடித்தல், வடக்கு கடல் பகுதியில் மீன் இனங்கள் உற்பத்தியாகின்ற இடங்களில் தடை செய்யப்பட்ட தொழிலை மேற்கொண்டு மீன் உற்பத்தியை அளிக்கின்ற செயற்பாட்டிற்கு அமைச்சர் ஆதரவு வழங்குகிறார். அவ்வாறு இருப்பின் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், வாழ்வாதாரத்தை பாதிக்கப்பட்டுள்ள மீனவ குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களைக் கொண்ட மீனவ குடும்பங்களுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் இதன்போது கேட்டுக் கொண்டனர்.

இந்த ஊடகச் சந்திப்பில், வி.சுப்ரமணியம் வடமாகாண கடற்தொழில் இணையம் தலைவர், அண்டனி யேசுதாசன் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு-கிழக்கு இணைப்பாளர்,  என்.எம் ஆலம் முன்னாள் தலைவர் வடமாகாண கடற்றொழிலாளார் இணையம், ஜோசப் பிரான்சிஸ் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் உபதலைவர், அ. மரியராசா வடமாகாண கடற்தொழில் இணையத்தின் முன்னாள் பொருளாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.