Print this page

இந்த அரசுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன: சிவாஜிலிங்கம்

கோத்தபாய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகமுன்னரே மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, காடழித்தல், சிங்கராஜ வனத்தை அழித்தல், வேலையில்லா பிரச்சினை,  தமிழர் இடங்களை  தொல்பொருள் திணைக்களத்திடம் கையகப்படுத்தல், முக்கிய இடங்களை பிற நாடுகளுக்கு விற்றல் போன்ற பல்வேறு மட்டங்களில் மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிராக கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

எது எவ்வாறாயினும், அந்த எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக வட பகுதியில் குறிப்பாக, யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் உட்பட ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் என வகைதொகையின்றி பயங்கரவாத தடைச்சட்டத்தின்  கீழ் கைதுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த கைதுகள் தென்பகுதியில் உள்ள எதிர்ப்பினை சமாளிப்பதற்காக இந்த அரசினால் முன்னெடுக்கப்படும் என்றும் ஒரு நாடகமாகவே நாங்கள் பார்க்கின்றோம். இங்கே கோத்தபாய அரசானது புலிகள் மீள உருவாவதை கட்டுப்படுத்துகின்றது. இங்கே தமிழ்த் தேசிய உணர்வாளர்களை கட்டுப்படுத்துகிறோம். என்பதை சிங்கள மக்களுக்கு காண்பிப்பதற்காகவே இந்த செயற்பாடுகள் அரசாங்கத்தினால் மும்மரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 இந்த செயற்பாட்டை நாங்கள் அனுமதிக்க முடியாது. சிங்கள மக்கள் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களுடைய உரிமை அந்த எதிர்ப்பு கூறிய காரணத்தை கண்டறிந்து இந்த அரசாங்கம் சரி செய்ய முன்வர வேண்டும். அதை விடுத்து விட்டு வடக்கில் ஒரு புலிப் பூச்சாண்டியை காட்டி தமிழ் இளைஞர் யுவதிகள் கைது செய்வதை இந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும். அதாவது, கைதுகள் இடம் பெற்றாலும் அந்த கைதுகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுகளிடம் வருகின்றன. இதன் காரணமாக மூன்று மாதத்திற்கு மேலாக  தடுத்து வைத்து விசாரித்து அவரது வாழ்வாதாரம் அவர் குடும்ப நிலைமை பாதிப்படையக் கூடிய இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. எனவே, தென்னிலங்கை மக்களை சமாளிப்பதற்கு இங்கே புலி உருவாக்கம் என காட்டுவதை  இந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்ற எனவும் அவர் தெரிவித்தார்