Print this page

ஊழலை நிறுத்துவதற்கு தொழிநுட்பத்தை பயன்படுத்துங்கள்: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

“பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அரச நிறுவனங்களின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்துகொள்ள முடியாது.” என்ற குற்றச்சாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

 கொவிட் தொற்று காலத்திலும்கூட “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்ட பல்வேறு விடயங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மக்களிடம் காணப்படும் மனக்குறைக்கு காரணம் சில அரச நிறுவனங்களில் நிலவுகின்ற செயற்திறனற்ற சேவை, ஊழல், தாமதம் போன்றவையாகும் என்று மக்கள் குறிப்பிடுகின்றனர். செயற்திறன்மிக்க அரச சேவைக்காக இராஜாங்க அமைச்சர்களின் நேரடி தலையீடு மற்றும் தொழிநுட்ப பயன்பாட்டின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இராஜாங்க அமைச்சர்களுடன் மாதாந்தம் இடம்பெறும் மீளாய்வு கூட்டம் நேற்று (21) கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில நிறுவனங்களின் தலைவர்கள் தமது பணிகளை உரியவாறு நிறைவேற்றாமை தொடர்பாகவும் அறியக் கிடைத்துள்ளது. அரசாங்கம் எதிர்பார்க்கும் இலக்கை நோக்கி செல்லாத அவ்வாறான நிறுவனங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு இராஜாங்க அமைச்சர்களுக்கு பணிப்புரைவிடுத்த ஜனாதிபதி, அந்நிறுவனங்களுக்கு வேறு அதிகாரிகளை நியமிக்க வேண்டுமெனில் அதற்கும் தான் தயாரென்றும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டுக் கடன் மற்றும் உள்நாட்டு வரவுசெலவு திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்பட்டுவரும் திட்டங்களின் முன்னேற்றத்தை அவதானித்து துரிதப்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

“மக்களுடனேயே எமது பலம் இருக்கிறது. அவர்களின் தேவைகளை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதுடன், மக்களிடமிருந்து தூர விலகி நிற்காமல் செயற்படுங்கள்” என்று ஜனாதிபதி இராஜாங்க அமைச்சர்களிடம் தெரிவித்தார்.

உற்சவ காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வடைவது சாதாரணமானது. அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியினால் விவசாயிகளின் விளைச்சலை விற்பனை செய்வதற்கு முடியாதுள்ளது. அந்த நிலைமையை மாற்றியமைத்து இம்முறை புதுவருட காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை கீழ்மட்டத்தில் பேணுவதற்கும் விவசாயிகளின் விளைச்சலை கொள்வனவு செய்வதற்கும் முதல் முறையாக அரசாங்கத்திற்கு முடியுமாக இருந்ததென சுட்டிக்காட்டிய பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ அவர்கள் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரச அதிகாரிகள் வழங்கிய ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

 

இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

Last modified on Thursday, 22 April 2021 08:25