Print this page

நாடு பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்: மகாசங்கத்தினர் தெரிவிப்பு

நாடு ஓரே இடத்தில் ஸ்தம்பித்து நின்று விடாது பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என மகாசங்கத்தினர் தெரிவித்தனர்.

பௌத்த ஆலோசனை சபை கூட்டம் நேற்று(23) பிற்பகல் 10வது தடவையாக ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோது கொழும்பு துறைமுக நகர்த் திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டதன் பின்னர் தேரர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இத்திட்டம் தொடர்பாக விரிவாக தெளிவுபடுத்தியதுடன் பொருளாதாரத்திற்கும் நாட்டுக்கும் கிடைக்கும் பயன்கள் பற்றியும் கருத்து தெரிவித்தார்.

நில அளவினை விரிவுபடுத்தி புதிய முதலீடுகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல் ஒரு நாடு என்ற வகையில் பெற்றுக்கொள்ளும் பாரிய வெற்றியாகும். தவறான கருத்துக்களை பரப்பி அனைத்தையும் எதிர்ப்பதற்கு பதிலாக ஒரு தேசமாக முன்னேறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும். இவ் அபிவிருத்தித்திட்டம் தொடர்பாக மக்களுக்கு சரியான தெளிவை வழங்கி, அதற்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தேரர்கள் சுட்டிக்காட்டினர்.

கொவிட் 19 புதிய உருமாற்றம், சுகாதார துறையின் ஆலோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் மகாசங்கத்தினருக்கு தெளிவுபடுத்தினார்.

புத்தபெருமான், திரிபீடகம் மற்றும் பௌத்த புண்ணிய தலங்கள் குறித்து தவறான கருத்துக்களை பரப்புவோர் குறித்து கண்டறிய நியமிக்கப்பட்ட குழு தமது பரிந்துரைகளை ஆலோசனை சபைக்கு முன்வைத்தது.

எதிர்வரும் கூட்டத்தில் இது தொடர்பாக மகாசங்கத்தினரின் கருத்துக்களை குழுவிடம் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

பௌத்த ஆலோசனை சபையின் உறுப்பினர்களான மகாசங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அரச அதிகாரிகள் இந்த பௌத்த ஆலோசனை சபை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

 

Last modified on Saturday, 24 April 2021 08:01