Print this page

நாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்: செந்தில் தொண்டமான்

அரச பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு 1,000 ஆயிரம் ரூபா நாளாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 

கூட்டுவொப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அம்சங்களை முறையாக பெற்றுக் கொள்ள  உரிய  தரப்பினருடன்  பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மலையக மக்களின் உரிமைகளை  பாதுகாப்பதற்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என  பிரதமரின் பிரதமரின் பதுளை மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு செயலாளர் திரு.செந்தில் தொண்டமான் தலைமையில் இன்று (27)  அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசுகையில் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பெருந்தோட்ட மலையக மக்களுக்கு   1,000 ஆயிரம் ரூபா நாளாந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுப்போம் என வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்.  

அரச மற்றும் தனியார்  பெருந்தோட்ட நிறுவனங்கள் 1,000 ஆயிரம் ரூபா நாளாந்த கொடுப்பனவை வழங்காமல் இருக்க தொடர்ந்து பல்வேறு வழிமுறைகளில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

பெருந்தோட்ட அமைச்சின் கீழ் உள்ள அரச தோட்டங்களின் தொழிலாளர்களுக்கு 1,000 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கவில்லை என  குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 16 அரச  பெருந்தோட்டங்கள் உள்ளன. இத்தோட்டங்களில் சுமார் 3,800  தொழிலாளர்கள் தொழில் புரிகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை 1,000 சம்பள நிலுவை முழுமையாக வழங்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட  மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட கூட்டுவொப்பந்தம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. கூட்டுவொப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை.

ஒப்பந்ததில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை முழுமையாக பெற்றுக் கொள்ள உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

சம்பள அதிகரிப்பின் பின்னர் பெருந்தோட்ட மலையக மக்களுக்கு எதிராக தோட்ட நிறுவனங்கள் செயற்படுவதாக அறிய முடிகிறது. இவ்விடயம் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அர்ப்பணிப்புடன் செயற்படும். தொழிலாளர்களின் சார்பில் அரசாங்கம் பல தீர்மானங்களை நெருக்கடியான சூழ்நிலையில் முன்னெடுத்துள்ளது.

 பெருந்தோட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.