Print this page

இலங்கை வர முயன்றவர்களிடம் 16,100 அமெரிக்க டொலா்கள் பறிமுதல்!

September 28, 2021

மதுரையில் இருந்து இலங்கை வர முயன்ற பயணிகளிடம் 16,100 அமெரிக்க டொலா்கள் பறிமுதல் செய்து, சுங்கத் துறையினா் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.


மதுரை விமான நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை இலங்கை வர பயணிகள் விமானம் தயாராக இருந்தது. அதில், பயணம் செய்யவிருந்த பயணிகளை சுங்கத் துறையினா் சோதனையிட்டனா். அப்போது, இலங்கை வழியாக டுபாய் செல்வதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 16 மீனவா்கள் வந்திருந்தனா். அவா்களை சோதனையிட்டபோது, ஒவ்வொருவரும் தலா ஆயிரம் அமெரிக்க டொலா் வைத்திருந்தனராம்.


சந்தேகமடைந்த சுங்கத் துறையினா் அவா்களிடம் விசாரித்தபோது, கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் பகுதியைச் சோ்ந்த பா்னாபஸ் மகன் சந்திரசேகா் (29), அதே பகுதியைச் சோ்ந்த மரியஜான் மகன் அருள்சேகா் ஆகிய இருவரும் மீனவா்களிடம் தனித்தனியே அமெரிக்க டொலா் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.


இதை அடுத்து, ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்க டொலா் கொண்டு சென்ற்காக இருவா் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்த 16,100 அமெரிக்க டொலா்  பறிமுதல் செய்தனா்.