Print this page

திருகோணமலையில் தீப்பற்றி எரிந்த தனியார் காப்புறுதி நிறுவனம்

September 29, 2021

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனியார் காப்புறுதி நிறுவனமொன்று தீப்பற்றியுள்ளது.

இன்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

டெங்குவை  கட்டுப்படுத்தும் நோக்கில் திருகோணமலை சுகாதார திணைக்களத்தினால் குறித்த காப்புறுதி நிறுவனத்துக்குப் பின்னால் சென்று பார்வையிட்டு தேவையற்ற பொருட்களை அகற்றுமாறு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு குழியொன்று தோண்டப்பட்டுக் குப்பைகள் புதைக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இதனையடுத்து வீதியால் சென்ற ஒருவர் பின்னால் தீப்பற்றுவதாகத் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு சென்று பார்வையிட்ட போது காப்புறுதி நிறுவனத்திற்குப் பின்னால் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த வாகன உதிரிப்பாகங்கள் தீ பற்றியதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை தீயை அணைப்பதற்காகத் தீயணைப்பு பிரிவினர் வருகை தந்து உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் களஞ்சியசாலைக்கு பின்னாலுள்ள வீட்டின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளது. தீப்பற்றியமை தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.