Print this page

கத்தோலிக்க சமூகத்தின் சார்பாக குரல் கொடுத்த மைத்திரி!

கத்தோலிக்க சமூகத்தின் மீது, தான், மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்துள்ளேன் ! அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் சோகமான நிகழ்வு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கத்தோலிக்க சமூகத்தினர் வலியுறுத்திவரும் நிலையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மகளிர் மற்றும் இளைஞர் வலுவாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மைத்திரிபால சிறிசேனவிடம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதில் அளித்த மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது சிக்கலான விஷயம் எனவும் அது பற்றி விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான சுமார் 20 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

 

Last modified on Monday, 18 October 2021 07:10