Print this page

வெளியான புதிய சுகாதார வழிகாட்டல்கள்

அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களிலும் விசேட மத வழிபாடுகளை நடாத்திச் செல்ல, புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பௌத்தர்கள் பௌர்ணமி நாட்களில் மற்றும் போதி பூஜையின் போது 50 பேரின் பங்குபற்றலுடன் வழிபாட்டில் ஈடுபட முடியும் என்றும், கத்தோலிக்க, இஸ்லாம் மற்றும் இந்து பக்தர்கள் விசேட மத வழிபாடுகளின் போது 50 பேரின் பங்குபற்றலுடன் கலந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் பொறுப்பாளர்கள், சுகாதார பாதுகாப்பு மற்றும் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் குறித்து, தேவைப்பட்டால் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமணத்தைத் தவிர, ஏனைய விருந்துபசாரங்களை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என்றும், கொவிட் தொற்றுப் பரவல் இன்னும் நிறைவடையவில்லை என்பதை அனைத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 
Last modified on Tuesday, 26 October 2021 04:23